செல்வாக்கு இல்லாத கட்சிகள் பயத்தில் புலம்புகிறார்கள்;முதல்வர் எடப்பாடிபழனிசாமி


சேலம்: மக்கள் செல்வாக்கு இல்லாத கட்சிகள் ஒன்று சேர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்கிறது என சேலம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசுகையில்முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.நல்லாட்சியில் தமிழகத்திற்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. உண்மையாக அனைத்து மக்களும் மகிழ்ச்சி அடையும் அளவிற்கு அறிவிப்பு உள்ளது. இது, அனைத்து மக்களுக்கும் கிடைத்த வெற்றி. உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றியதால், இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த ஆளுமை திறன் மிக்க மாநிலம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. இதற்கு பாடுபட்ட அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அரசு ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.அதிமுகவை குறைசொல்வது தான் ஸ்டாலினின் வழக்கம். ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக, இதனை எதிர்க்கட்சி தலைவர் குறை சொல்கிறார். மத்திய அரசு, இந்தியா முழுவதும் ஆய்வு செய்து ஒவ்வொரு துறைக்கும் மதிப்பெண் கொடுத்ததில், அதில் தமிழகம் 5.62 மதிப்பெண் பெற்று, தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இதில் யார் சிபாரிசும் கிடையாது.
உண்மையான விவரங்கள் அடிப்படையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரிக்கு அளித்துள்ளது. இது காங்கிரஸ் ஆளும் மாநிலம். 50 வகையான காரணிகளை கொண்டு ஆய்வு செய்து முடிவை வெளியிட்டார்கள்.ஊரக பகுதிகளுக்கும், நகர்ப்பகுதிகளுக்கும் தனித்தனியே தேர்தல் என்பது புதிதல்ல.


தேசிய மக்கள் தொகை பதிவேட்டை, 2003ல் பா.ஜ., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட போது, திமுகவும் மத்தியில் அங்கம் வகித்தது. 2010ல் அமல்படுத்தப்பட்ட போதும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கம் வகித்தது. திட்டமிட்டு, வேண்டுமென்றே அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக எதிர்க்கின்றனர். மக்களை குழப்புகிறார்கள்.


மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாத கட்சிகள் சேர்ந்து கொண்டு மத்திய மாநில அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை எதிர்க்கின்றனர்.மக்களை குழப்பி நாடகம் என்ஆர்சி எடுக்கவில்லை என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெளிவாக கூறியுள்ளார். இதனை இளைஞர்களும், பொது மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். ஸ்டாலின் அரசியல் சூழ்ச்சி செய்து அரசியல் நாடகமாடுவதை மக்களை குழப்பி நாடகம் ஆடுகிறார். தேசிய மக்கள் தொகை பதிவேட்டால், யாருக்கும் பாதிப்பு இல்லை. 6 மாதங்கள் குடியிருந்தாலே, தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இடம்பிடிக்கலாம். இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள் யாரும் விடுபட மாட்டார்கள் என்பதை மத்திய அரசு தெளிவாக கூறியுள்ளது.இவ்வாறு முதல்வர் இ.பி.எஸ்., கூறினார்.