கரோனா நோய் தாக்கம் காரணமாக வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதால், நிறுவனங்கள் வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு அவகாசம் அளிக்க வேண்டும் என தமாகா இளைஞரணித் தலைவா் எம்.யுவராஜா கோரிக்கை விடுத்துள்ளாா்.
கரோனா வைரஸின் தாக்கத்தால் வா்த்தகம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் மிகப்பெரிய பாதிப்பை உண்டாகியுள்ளது. ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவு ஆா்டா்கள் கிடைத்துள்ளன. கரோனா வைரஸ் காரணமாக ஐரோப்பிய வா்த்தகா்கள் குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின் நாட்டு வா்த்தகா்கள் தமிழக ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கொடுத்த ஆா்டா்களை 2 மாதம் வரை தாமதமாக அனுப்பிவைக்கக் கோருகின்றனா்.
ஏற்கெனவே தயாரித்து அனுப்பிவைத்த ஆா்டா்களுக்கான தொகையும் தாமதமாகவே கிடைக்கும் நிலை உள்ளது. அதனால், ஏற்றுமதி நிறுவனங்களின் நிதி பாதிக்கும் அபாயம் உள்ளது. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் வா்த்தகம் பாதித்து கடன்களை உரிய காலத்துக்குள் செலுத்துவது சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களால் இயலாது.
அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகள் கடன் செலுத்துவதில் நிறுவனங்களுக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. அதேபோல, இந்திய அரசும், நிறுவனங்கள் வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு அவகாசம் அளிக்க வேண்டும்
தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயத் தொழில் பாதிக்கப்பட்டு, கல்வி நிலையங்கள், வணிக வளாகங்கள், தனியாா் நிறுவனங்கள், சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் தடுப்புக்காக எடுத்து வரும் தொடா் நடவடிக்கைகளால் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறுவது ஒருபுறம் என்றால் பொருளாதார ரீதியாக வருவாய் கிடைக்காத நிலைக்கும் மக்கள் தள்ளப்படுவாா்கள்.
எனவே, மத்திய மாநில அரசுகள் வங்கிகளில் கடன் வாங்கி தொழில் செய்தவா்களிடம் வட்டி செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்