சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்ட விநியோகஸ்தரின் உரிமம் ரத்து செய்யப்படும் என பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளன.சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும்போது நுகர்வோரிடம் கூடுதலாக கட்டணம்வசூலிக்கப்படுகிறது. ஆனால்சமையல் எரிவாயு கட்டணத்துடன் சேர்த்தே விநியோகத்துக்கும் தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த கட்டணத்தை சிலிண்டர் விநியோகிக்கும் நபர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வழங்காமல், பொதுமக்களிடம் வசூலிக்குமாறு உத்தரவிடுகின்றன.
இதனால் தரைத்தளத்துக்கு ஒரு கட்டணம், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஒரு கட்டணம் என சிலிண்டர் விநியோகத்துக்கு ரூ. 30 முதல் ரூ. 100 வரை இஷ்டம்போல கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதன்மூலம் பொதுமக்களின் பணம் கோடிக்கணக்கில் சுரண்டப்படுகிறது. எனவே சிலிண்டர் விநியோகத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் சிலிண்டர் சப்ளை செய்யும் நபர்களுக்கு சீருடை வழங்கவும், அடையாள அட்டை வழங்கி பணி வரன்முறை செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத்பெட்ரோலியம் நிறுவனங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுக்களில் கூறியிருந்ததாவது:
சமையல் எரிவாயு சிலிண்டர்விநியோகத்துக்கான உரிமத்தை வழங்கும்போதே பல்வேறுவிதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க கூடுதல்கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கமிஷன் தொகையில் 20 முதல் 35 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து 4 முறை இதுபோல முறைகேடுகளில் ஈடுபட்டால் அந்த விநியோகஸ்தரின் உரிமம் ரத்து செய்யப்படும். பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.கூடுதல் கட்டணம் செலுத்துவதை தவிர்க்கநுகர்வோர் ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தவும், அதையும் மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களுக்கு புகார் அளிக்கவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விநியோகஸ்தரின் சேவையில் திருப்தி இல்லை என்றால் நுகர்வோர் தங்களது சமையல் எரிவாயு இணைப்பை வேறு நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது