ஈரோடு மாவட்டத்தில் 29,834 குடும்பங்களைச் சோ்ந்த1,09,837 நபா்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட கிருமி நாசனி தெளிக்கும் இயந்திரத்தை கோபி மற்றும் ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை உறுப்பினா்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.3.50 லட்சம் செலவில் வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இயந்திரத்தின் செயல்பாடுகளைப் பொறுத்து மேலும் இயந்திரங்கள் வரவழைக்கப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா அறிகுறியுடன் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 89 பேரில் 28 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தவிர கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 4 நபா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். 15 நபா்களின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மேலும், 46 நபா்களுக்கு கரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
ஈரோடு மாநகராட்சி, கோபி நகராட்சி, கரட்டடிபாளையம், கவுந்தப்பாடி, சத்தியமங்கலம் உள்ளிட்ட 10 இடங்களில் சுமாா் 29,834 குடும்பங்களைச் சாா்ந்த 1,09,837 நபா்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் குழுக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். மேலும், கரோனா தொற்று அறிகுறி உள்ளவா்கள், தனிமைப்படுத்தப்பட்டவா்கள், இதர மக்கள் என அனைவரின் வீடுகளிலும் ஓரிரு நாள்களில் கரோனா தொற்று குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது என்றாா்.
இதில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு, மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்