நோய் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிப்பு தேவை;மருத்துவ நிபுணர்கள்

சென்னை:முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  மருத்துவ நிபுணர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து உள்ளதால், ஊரடங்கை மேலும் 14 நாட்கள் நீட்டிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதுவரை 834 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 9 பேர் பலியாகி இருக்கிறார்கள். கொரோனா நோய் மேலும் பரவாமல் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை மற்றும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கவும், கொரோனா ரைவஸ் தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சிசை அளித்திடவும் ஜெனீவா, வேலூர், தூத்துக்குடி, ஈரோடு மற்றும் சென்னையிலுள்ள மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார நிபுணர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.


இந்தக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலான மருத்துவர்கள், கொரோனா தீவிரம் 3வது கட்டத்தில் நுழைய இருப்பதாகவும், அப்போது அதன் தாக்கம் கடுமையாக இருக்கும் என்பதால், ஊரடங்கை மேலும் சில நாட்கள் நீட்டிக்கும்படி கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.


முதல் அமச்சரை சந்தித்த பின்பு, மருத்துவ நிபுணர்கள் சார்பில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் பிரதீபா கூறியதாவது:


' தமிழகத்தில் அரசு எடுத்து வரும் நடவடிக்கை திருப்திகரமாக உள்ளது. அரசு நடவடிக்கை என்னதான் எடுத்தாலும் கொரோனா தாக்கம் அதிகரித்தே வருகிறது. தமிழகத்தில் சுகாதார கட்டமைப்பு வலுவாக உள்ளது. இருந்தபோதிலும் நோய் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிப்பு தேவை. எனவே, ஊரடங்கை மேலும் 14 நாட்கள் நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரை வைத்துள்ளோம்' என்றார்