இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பிளாஸ்மா சிகிச்சை நடத்த கேரளாவுக்கு அனுமதி

திருவனந்தபுரம்: கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவரின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிகிச்சைக்கு இந்தியாவிலேயே முதன்முறையாக கேரளாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கேரளாவில்தான் முதலில் கொரோனா நோய் அதிகம் பரவியது. தீவிர தடுப்பு நடவடிக்கை காரணமாக, தற்போது பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், நாட்டிலேயே முதன்முறையாக கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க கேரளாவுக்கு இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களின் ரத்தத்தில் 'ஆன்டிபாடி' எனப்படும் நோய்க்கு எதிரான எதிர்ப்பு திரவம் இருக்கும். பிளாஸ்மா எனப்படும் அதை பிரித்தெடுத்து அதை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து சிகிச்சை அளிக்கப்படும்.

இது, 'பிளாஸ்மா தெரபி' சிகிச்சை என அழைக்கப்படுகிறது. இந்த முறை 100 சதவீதம் வெற்றியடையும் என உறுதியாக கூற முடியாவிட்டாலும், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 1918, 1957 ஆகிய ஆண்டுகளில் புளூ, சார்ஸ், எச்1 என்1 பன்றிக்காய்ச்சல், எபோலா ஆகிய வைரஸ் நோய்களுக்கு இந்த சிகிச்சை முறை பயன்படுத்தப்பட்டது. இந்தியாவிலும் இந்த சிகிச்சை முறையை கொண்டு வர வேண்டும் என முதன் முதலில் கேரளாவில் இருந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த சிகிச்சை முறை குறித்து முழு அறிக்கையும் திருவனந்தபுரம் சித்திரை திருநாள் மருத்துவ மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சி கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. இதை பரிசீலித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பிளாஸ்மா சிகிச்சை நடத்த கேரளாவுக்கு அனுமதி அளித்துள்ளது