கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், விவசாய விளைபொருட்கள் சந்தைக்கு எடுத்துச்செல்வதில் விவசாயிகள் சிரமங்களை சந்தித்துவருகின்றனர்.
திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கால், மாற்று வழியை பற்றி சிந்தித்தும் பார்த்திராத விவசாய பெருமக்கள் தங்களின் விளைபொருட்கள் வீணாவதை கண்டு மனம்நொந்தனர்.
விவசாயிகளின் அச்சத்தைப்போக்க தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பதற்கு அவசர உதவி எண்களை மாவட்ட வாரியாக வழங்கி இருக்கிறது. மாநிலளவில் தொடர்புகொள்ள 044- 22253884, 22253885, 22253496, 9500091904 ஆகிய எண்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்புகொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
மேலும், குளிப்பதன கிடங்குகளில் சேமித்துவைக்க வசூலிக்க படும் பயன்பாட்டுக்கட்டணத்தை ஏப்ரல் 30 வரை முழுவதும் ரத்து செய்திருப்பதோடு, விவசாய பொருட்கள் விற்பனைசெய்யப்படும் சந்தைகளில் வசூலிக்கும் 1 சதவீத சந்தை கட்டணத்தையும் 30 ஏப்ரல் வரை நிறுத்திவைத்துள்ளது.
காய்கறி மற்றும் பழவகைகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய விரும்பும் தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு பத்துலட்சம் வரை கடன் வசதி வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கூட்டுறவு பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்ய அரசு தோட்டக்கலை துறை சார்பில் 500 நடமாடும் விற்பனை நிலையங்களை ஏற்பாடுசெய்துள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது