தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது இந்தியாவில் வரலாறு காணாத வகையில் கரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் மக்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக வீட்டிற்குள்ளே முடங்கி வேலைவாய்ப்பை இழந்து வருமானத்தைப் பறிகொடுத்து வாழ்வாதாரத்திற்காக கடும் போராட்டத்தை சந்தித்துவருகிறார்கள்.
இந்நிலையில் சிறுசேமிப்பு திட்டங்கள், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி உள்ளிட்டவற்றுக்கு வட்டி விகிதத்தை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் குறைக்கப்போவதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருக்கிறது. தற்போது சிறுசேமிப்புகளுக்கு வழங்கப்பட்டுவரும் 7.9 சதவீத வட்டியை 7.1 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருப்பது மிகுந்த மனவேதனை அழிக்கும் செயலாகும். அதேபோல தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதிக்கான வட்டி விகிதத்தை 8.65 சதவீதத்திலிருந்து 8.50 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் தொழிலாளர்கள் பெறுகிற வருமானம் கடுமையாக பாதிக்கப்பட இருக்கிறது.
அதேபோல பொது வருங்கால வைப்புநிதி என்பது பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்களில் செலுத்தப்பட்ட மொத்த தொகுப்பாகும். இதில் முதலீடு செய்தால் அதிக வட்டியும் பாதுகாப்பும் இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் இத்தகைய திட்டங்களில் மக்கள் முதலீடு செய்கிறார்கள்.
தங்களது மாத அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதத்தை தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதிக்குச் செலுத்துகிறார்கள். தொழிலாளர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வைப்புநிதிக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு குறைத்ததை உடனே கைவிடவேண்டும் என்று தமாகா இளைஞரணி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.