ஈரோடு, மே .12-
கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் ஈரோடு மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மார்ச் 25 ஆம் தேதியில் இருந்து இன்று வரை ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஆல்பா இளங்கோ அவர்கள் தலைமையில் நாளொன்றுக்கு 2,500 பேருக்கு தன்னார்வலர்கள், சமூக சேவகர்கள் மூலமாகவும் உணவுகளை வழங்கி வருகின்றனர்.
தேவைப்படும் மக்களுக்கு தேவையான நேரத்தில் உணவு பொட்டலங்களை நேரடியாக கொண்டு போய் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். தன்னார்வலர்கள் எந்தவித எதிர்பார்ப்புமின்றி இவர்களுக்கு உதவி செய்கிறார்கள் . கொரோனா பாதிப்புக்குள்ளான முதல் மூன்று மாவட்டங்களில் ஒன்றாக இருந்த ஈரோடு மாவட்டத்திற்கு இவர்களுடைய சேவை மிகப்பெரிய உதவியாக இருந்துவருகிறது. உணவு வேண்டும் என்று இவர்களிடம் சொன்னால் போதும் மூன்று வேளைக்கும் உணவு வந்துவிடும். நேற்று உணவு வழங்கும் பணியை ஈரோடு போக்குவரத்து காவல் துணை கண்காணிப்பாளர் எட்டியப்பன் துவக்கி வைத்தார் .இதில் ஈரோடு மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாவட்ட தலைவர் ஆல்பா இளங்கோ, வாசவி கல்லூரி உடற்பயிற்சி பேராசிரியர் எஸ். ரமேஷ், உமா சிவம் ,பாஜக மாவட்ட தலைவர் சிவசுப்ரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து ஈரோடு மாவட்ட விஸ்வ ஹிந்து மாவட்ட தலைவர் ஆல்பா இளங்கோ கூறுகையில் ஊரடங்கால் பாதிக்கப்பட் மக்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றோம் .பொருளுதவி கொடுக்கும் யாரிடமும் பணமாக பெறாமல் சமையலுக்கு தேவைப்படும் பொருளாக பெற்றுக்கொண்டு சேவையாற்றிவருகின்றோம் . சில சமூக சேவகர்கள் கொடுக்கும் பொருளுதவியும் இச்சேவையை வலுப்பெற செய்துள்ளது. இன்றுவரை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்களை வழங்கியுள்ளோம். இன்று வரை 49 ஆவது நாளாக இப்பணி தொடர்கின்றது என்று கூறினார்
ஈரோடு மாவட்ட விஎச்பி சார்பில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது