மக்களின் மீது கடன் சுமையை ஏற்றக்கூடாது;திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்


சென்னை,
மே.16- 
நாட்டு மக்களுக்கு உடனே பசியைத் தீர்க்க வேண்டுமே தவிர, அவர்களின் கடன் சுமையை ஏற்றக்கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று 20 லட்சம் கோடி நிவாரண திட்டங்களின் இரண்டாம் கட்ட அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பை விமர்சித்துள்ள ஸ்டாலின், நிதியமைச்சரின் அறிவிப்பு ஏட்டு சுரைக்காய் எனவே அது கறிக்கு ஆகாது எனக் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளுக்கு நேரடியாகப் பணம் வழங்க மனமின்றி மத்திய அரசு கிரெடிட் கார்டு மூலம் கடன் வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.வாங்கிய கடனையே திரும்பிச் செலுத்த முடியாத விவசாயிகளின் தலையில் இது மேலும் பாறாங்கல்லை ஏற்றி வைக்கும் செயல் எனக் குற்றம்சாட்டியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ரூ.7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்தது போல, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரூ.60 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தது போல தற்போதைய நிதியமைச்சர் ஏன் கடனை தள்ளுபடி செய்ய முன்வரவில்லை ? எனக்கேள்வி எழுப்பியுள்ளார்.நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடன் ஒருமாதம் கழித்து வரும் என அறிவிக்கப்பட்டதைச் சாடியுள்ளார். உடனடியாக பசிப்பிணி தீர்க்கும் இந்தியா தான் தேவை என்றும், ’மேக் இன் இந்தியா’, ’ஸ்டேண்ட் அப் இந்தியா’ போன்றவை அல்ல என்றும் கூறியுள்ளார். இந்தியர்களுக்கு உணவளிப்பது அரசின் கடை என்றும், மத்திய உள்துறைச் செயலரே புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 4.14 கோடி என அறிவித்த பின்னர், நிதியமைச்சர் எவ்வாறு 8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயனடைவார்கள் என அறிவித்தார் ? என்று கேள்வி எழுப்பியுள்ளார். கடன் வாங்கிக்கொள்ளச் சொல்வது 50% இந்தியர்களுக்கு எந்த வகையிலும் உதவாது என்றும், மத்திய அரசு ஏழைகளுக்குக் கருணை மழை பொழிய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்