ஊரடங்கை தளர்த்துவதில் கவனமாக செயல்படாவிட்டால், கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனாவின் தாண்டவம் ஐரோப்பாவை ஆட்டிப்படைத்து அடுத்தபடியாக அமெரிக்காவில் சூறாவளியாக சுழன்று வருகிறது. இந்த கொடிய வைரசை கட்டுப்படுத்துவதற்காக ஏறக்குறைய அனைத்து உலக நாடுகளிலும் ஏப்ரல் மாதம் முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. தற்போது, ஊரடங்கை தளர்த்தும் நடவடிக்கையில் அனைத்து உலக நாடுகளும் இறங்கியுள்ள நிலையில், அவசரப்படவேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்தியாவசியப் பணிகளுக்கு அனுமதியளிப்பதில் தொடங்கி படிப்படியாக மட்டுமே ஊரடங்கு தளர்த்தப்பட வேண்டும் என்று கூறியுள்ள உலக சுகாதார அமைப்பு அவசரப்பட்டால் மீண்டும் முழு ஊரடங்கை அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளது. கொரோனா போன்ற பெருந்தொற்று எதிர்காலத்தில் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ள அந்த அமைப்பு, அதை எதிர்கொள்வதற்கு தற்போதே உலக நாடுகள் தயாராக வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. அந்தவகையில், தற்போது உலகத்தின் மொத்த உற்பத்தியில் 10 சதவீதம் மட்டுமே சுகாதரத்துறைக்கு ஒதுக்கப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள உலக சுகாதார அமைப்பு, அதை கணிசமாக அதிரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.இந்த பெருந்தொற்றை உலகம் எவ்வாறு எதிர்கொண்டது என்பதை விட, இதிலிருந்து என்ன பாடம் கற்றது என்பதின் அடிப்படையிலேயே வரலாறு நம்மை கணிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. கெரோனா வைரஸ் சீனாவில் ஆய்வு மையத்தில் உருவாக்கப்பட்டது என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், அதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை என்று மறுத்துள்ள உலக சுகாதார அமைப்பு, வைரஸ் குறித்து ஆராய்வதற்கு சர்வதேச நிபுணர்களை அனுமதிக்க வேண்டும் என்று சீனாவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறியுள்ளது